மதுரை: சிவகங்கையைச் சேர்ந்த மாரிமுத்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவி்ல், மானாமதுரை தாயாபுரம் கிராமத்தில் கட்டப்பட்ட புதிய தேவாலய கட்டிடத்தை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
மனுவை நீதிபதிகள் தண்டபாணி, திலீப்குமார் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், தேவாலயம் தனியார் பட்டா நிலத்தில் அமைந்துள்ளது. சுமார் 25 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட இடத்தில் பிரார்த்தனைக் கூடம் இருந்து வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மறுகட்டுமானத்துக்காக 2018 செப்டம்பரில் விண்ணப்பம் செய்யப்பட்டு, உள்ளாட்சி அமைப்பால் திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதும் உறுதியாகிறது. தேவாலயத்துக்கும், முத்து மாரியம்மன் கோயிலுக்கும் இடையே 45 மீட்டர் தூரம் உள்ளது.
இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக இங்கு வழிபாடு செய்து வருகின்றனர். பிரார்த்தனை கூடம் இருப்பதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டுமானம் அல்லது பிரார்த்தனைக் கூடத்தின் பயன்பாடு எந்த சட்ட விதிகளையும் மீறுவதாக ஆதாரம் இல்லை. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் அமைதியாக இணைந்து வாழும் அரசியலமைப்புச் சட்ட உத்தரவாதத்தை, ஆதாரமற்ற அச்சத்தின் அடிப்படையில் கட்டுப்படுத்த முடியாது.
அதோடு, மனுதாரர் சம்பந்தப்பட்ட பகுதியில் வசிப்பவர் அல்ல. மாவட்ட ஆட்சியரின் உத்தரவில் சட்டவிரோதமோ, நடைமுறை குறைபாடோ ஏதுமில்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.