மதுரை: ‘பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநரை அவமதிப்பது சரியல்ல. இதைத் தவிர்க்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்’ என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா கடந்த ஆக.13-ம் தேதி நடந்தது. இந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜீன் ராஜன் என்பவர் ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்து துணை வேந்தரிடம் இருந்து பட்டம் பெற்றார். பல்கலைக்கழகச் சட்டப்படி வேந்தர்தான் பல்கலைக்கழகத்தின் தலைவர். வேந்தர் இல்லாத போதுதான் துணை வேந்தர் பட்டங்களை வழங்க முடியும். பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்தது சட்ட மீறல் ஆகும்.
பட்டம் பெற மறுத்தது தொடர்பாக அந்த மாணவி செய்தியாளர்களிடம் கூறியபோது, தமிழகத்துக்கு ஒன்றும் செய்யாத ஆளுநரிடம் நான் ஏன் பட்டம் வாங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா அரசியல் போராட்டத்துக்கான களம் அல்ல.
அந்த மாணவி துணைவேந்தரிடம் இருந்து பெற்ற பட்டம் செல்லத்தக்கது அல்ல. எனவே, பட்டத்தை ரத்து செய்தும், அதுவரை பட்டத்தின் செல்லுபடியாகும் தன்மைக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்ற பட்டியலில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தின் மாண்பைக் காக்க வேண்டும். இது குறித்து இளைய தலைமுறைகளுக்கு உரிய வழிகாட்ட வேண்டும். பல்கலைக்கழக விதிப்படி மாணவியைப் போல் செயல்பட்டவர்கள் மீது துணை வேந்தர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா? என மனுதாரரும், பல்கலை.வழக்கறிஞரும் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிச.18-க்கு தள்ளிவைத்தனர்.