தமிழகம்

பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதி விவகாரம்: ஐகோர்ட் நாளை விசாரணை

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளில் இந்து, சீக்கியம் மற்றும் பௌத்தம் ஆகிய மதங்களை பின்பற்றும் பட்டியல் இனத்தவரையே போட்டியிட அனுமதிக்கக் வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக நாளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் சூடுபிடித்துள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 44 தொகுதிகள் பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளாக உள்ளன.

          

இந்த நிலையில், பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்ட அந்த தனித் தொகுதிகளில் இந்து, சீக்கியம் மற்றும் பௌத்தம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பின்பற்றும் பட்டியல் இனத்தவரையே அனுமதிக்கக் வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்து, சீக்கியம் அல்லது பௌத்தம் மதத்தை பின்பற்றுபவர்களையே பட்டியல் இனத்தவர் என்று இந்திய அரசியல் சாசனம் தெரிவித்தது, இதையே உச்ச நீதிமன்றமும் சமீபத்தில் வலியுறுத்தியுள்ளது; தற்போது 44 தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 90 சதவிகிதத்தினர் இந்து, சீக்கியம், பௌத்தம் மதத்தை பின்பற்றாதவர்கள் என்றும், கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளதாக மனுவில் கூறியுள்ளார்.

அதனால் வேட்புமனு பரிசீலனையின் போது அரசியல் சாசனம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீவிரமாக ஆய்வு செய்யவேண்டுமென அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதுபதி அஜி.அருள்முருகன் அமர்வில், அர்ஜுன் சம்பத் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.கார்த்திகைபாலன் ஆஜராகி, தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடனும், மனுக்கள் நாளையுடனும் முடிவதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, அர்ஜுன் சம்பத்தின் வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளது.

SCROLL FOR NEXT