சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த காலத்திற்கான, ஊதிய நிலுவைத் தொகையை வழங்க கோரிய சிஐஎஸ்எஃப் வீரர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் சேர்ந்த ஜி.சந்து என்பவர், ஆந்திராவில் பணிபுரிந்தபோது, அவர் மீதான குற்றவியல் வழக்கு நிலுவையில் இருந்ததால், 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம், சந்து பணிநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டது.
அதன்படி, 2019ஆம் ஆண்டு மே மாதம் பணியில் சேர்க்கபட்ட நிலையில், ஜூனியர்களை விட தனக்கு ஊதியம் குறைவாக இருப்பதாக வழக்கு தொடர்ந்தார். அதன்படி, சந்துவுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது. பின்னர், சென்னையில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப். பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அதன்பின்னர், பணிநீக்கம் செய்யப்பட்ட 2013 ஜனவரி முதல் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்ட 2019 மே மாதம் வரையிலான காலத்துக்கான் சம்பள நிலுவைத் தொகையை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அவரது கோரிக்கையை நிராகரித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் நீதிபதி கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் ஆகியோர், நிலுவை ஊதியம் இல்லாமல், தொடர் சேவையுடன் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட மனுதாரர், பணி நீக்கக் காலத்தில் பணியில் இல்லாத நிலையில், அந்த காலத்திற்கான ஊதியத்தைக் கேட்க முடியாது என கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.