தமிழகம்

​காஞ்சி அத்​திவரதர் இருக்​கும் அனந்​தசரஸ் குளத்தை திறப்பது குறித்து பரிசீலிக்க ஐகோர்ட் உத்​தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ஆவணி அவிட்​டத்தை முன்​னிட்​டு, அத்​திவரதர் அனந்த சயனத்​தில் இருக்​கும் அனந்​தசரஸ் குளத்தை திறக்க வேண்​டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலித்து முடி​வெடுக்​கு​மாறு காஞ்​சிபுரம் வரத​ராஜப் பெரு​மாள் கோயில் நிர்​வாகத்​துக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

காஞ்​சிபுரம் வரத​ராஜப் பெரு​மாள் கோயி​லில் அமைந்​துள்ள அனந்​தசரஸ் குளத்​தில் இருக்​கும் உள்​மண்​டபத்​தில் அனந்த சயன கோலத்​தில் இருக்​கும் அத்​திவரதர், 40 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை வெளியே எடுக்​கப்​பட்​டு, கோயில் வசந்த மண்​டபத்​தில் பக்​தர்​களுக்கு அருள்​பாலிப்​பார். பின்​னர் மீண்​டும் அனந்த சரஸ் குளத்​தின் உள் மண்​டபத்​தில் சயனக் கோலத்​தில் வைக்​கப்​படு​வார். அதன்​பிறகு அந்த குளத்​துக்​குள் செல்​ல​வோ, நீராடவோ யாரும் அனு​ம​திக்​கப்​படு​வ​தில்​லை.

அந்த வகை​யில், கடந்த 1979-ம் ஆண்டு தரிசனம் கொடுத்த அத்​திவரதர் 40 ஆண்​டு​களுக்​குப் பிறகு கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஆக.17-ம் தேதி வரை சயன கோலத்​தி​லும், நின்ற கோலத்​தி​லும் அருள்​பாலித்​தார். உலகம் முழு​வதும் இருந்து ஒரு கோடிக்​கும் அதி​க​மான பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர். பின்​னர், தைலக்​காப்பு பூசப்​பட்டு அத்​திவரதர் மீண்​டும் அனந்​தசரஸ் குளத்​துக்​குள் வைக்​கப்​பட்​டார்.

இந்​நிலை​யில், சின்ன காஞ்​சிபுரத்​தைச் சேர்ந்த தத்தா தேசிக திரு​வம்​சத்​தார் சபை சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்த மனு​வில், ‘ஆக.27-ம் தேதி (இன்​று) ஆவணி அவிட்​டத்தை முன்​னிட்டு தொடங்​கும் புனித சடங்​கு​களின் ஒரு பகு​தி​யாக புனித நீராடு​தல் உள்​ளிட்ட சடங்​கு​களை அவர​வர் நடை​முறைப்​படி மேற்​கொள்ள தங்​களது சபை​யினரை​யும், வேத பாராயணக்​காரர்​களை​யும், ஸ்தலத்​தார்​களை​யும் அனு​ம​தித்து அனைத்து புனித நாட்​களி​லும் அனந்​தசரஸ் குளத்தை திறந்து வைக்க வரத​ராஜப் பெரு​மாள் கோயில் நிர்​வாகத்​துக்கு உத்​தர​விட வேண்​டும்’ என்று கோரப்​பட்​டிருந்​தது.

நீதிபதி கிருஷ்ணன் ராம​சாமி முன்பு இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில், ‘முக்​கிய​மான புனித நாட்​களில் அனந்​தசரஸ் குளத்தை திறக்க உயர் நீதி​மன்​றம் ஏற்​கெனவே உத்​தரவு பிறப்​பித்​துள்ள நிலை​யில் அதைப் பொருட்​படுத்​தாமல் கோயில் நிர்​வாகம் குளத்தை மூடி, அடிப்​படை மத உரிமை​கள் தடுக்​கப்​படு​கின்​றன’ என்று குற்​றம்​சாட்​டப்​பட்​டது.

கூட்​டத்தை சமாளிக்க முடி​யாது

ஆனால், கோயில் நிர்​வாகம் தரப்​பில், ‘புனித நீராடு​வதற்​காக, அத்​திவரதர் சயனக் கோலத்​தில் இருக்​கும் அனந்​தசரஸ் குளத்தை திறந்​தால் ஏராள​மான பொது​மக்​கள் கூட வாய்ப்பு உள்​ளது. கூட்​டத்தை சமாளிக்க முடி​யாது. குளத்​தின் புனித​மும் கெட்​டு​விடும்’ என்று மறுப்பு தெரிவிக்​கப்​பட்​டது.

இரு தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, ‘புனித நாட்​களில் மட்​டும் அனந்​தசரஸ் குளத்தை திறக்​கலாம் என கடந்த 2020 ஜூன் மாதம் உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்ள நிலை​யில், குளத்தை திறக்​கக் கோரி மனு​தா​ரர் தரப்​பில் அளிக்​கப்​பட்​டுள்ள கோரிக்கை மனுக்​களை பரிசீலித்​து, வரத​ராஜப் பெரு​மாள் கோயில் நிர்​வாகம் தகுந்​த முடி​வெடுக்​க வேண்​டும்​’ என்​று உத்தரவிட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT