தமிழகம்

போலீஸார் கூறுவதை கிளிப்பிள்ளை போல் வந்து அப்படியே சொல்லக் கூடாது: அரசு வழக்கறிஞர்களுக்கு ஐகோர்ட் அறிவுரை

செய்திப்பிரிவு

மதுரை: அரசு வழக்கறிஞர்கள் ஆவணங்களை முழுமையாகப் படித்து திறம்பட வழக்கை நடத்த வேண்டும். காவல் துறை கூறுவதை அப்படியே கிளிப்பிள்ளை போல் நீதிமன்றத்தில் திரும்பச் சொல்லக் கூடாது என உயர் நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

நாகர்கோவில் பெருவிளையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெய்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ஆசாரிபள்ளம் காவல் நிலைய வழக்கில் குற்றவாளிகளுக்கு வழக்கறிஞர்கள் ஆஜராக தடை விதித்து நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றியதால் நாகர்கோவிலில் இருந்து நெல்லை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட வழக்கில் காவல்துறை தரப்பில் ஆஜராகி வரும் அரசு வழக்கறிஞர் கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்வு பிறப்பித்த உத்தரவு: கன்னியாகுமரி வழக்கறிஞர் சங்கம் இனிவரும் காலங்களில் குற்றவாளிகளுக்கு ஆஜராக மறுக்கும் தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது.

அரசு தரப்பு வழக்கறிஞரின் நடத்தையில் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு, அதை நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டால் மட்டுமே அவர் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆட்சியில் இருப்பவர்கள் திறமையானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க விரும்பிய காலம் மலையேறி விட்டது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களின் ஆதரவாளர்களுக்கு பதவி வழங்குகின்றனர். ஆட்சிகள் மாறினாலும் ஒருவர் 16 ஆண்டுகளுக்கு மேலாக அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய காலமும் இருந்துள்ளது. தற்போது நிலைமை அப்படியில்லை.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அரசு வழக்கறிஞர்கள் தங்கள் பதவியிலிருந்து விலக வேண்டிய சூழல் உள்ளது. அரசு வழக்கறிஞர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான விதிகள் இருந்தாலும், நியமனங்கள் எப்படி நடைபெறுகின்றன என்பது தெரியும். கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் சமர்ப்பித்த பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் அப்படியே அங்கீகரித்ததும் தெரியும்.

அரசு வழக்கறிஞர் அச்சம் இல்லாமல் செயல்பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும். இதற்கு இமானுவேல் சேகரன் வழக்கில் சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்த வி.எல்.எதிராஜ், முத்துராமலிங்கத் தேவர் மீது வழக்கு ஏதுமில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது சிறந்த உதாரணம். அரசு வழக்கறிஞர் ஆவணங்களை முழுமையாகப் படித்து, திறம்பட வழக்கை நடத்த வேண்டும். காவல் துறை கூறுவதை அப்படியே கிளிப்பிள்ளை போல அவர் திரும்பச் சொல்லக் கூடாது.

இந்த வழக்கில் மனுதாரர் முன்னாள் அரசு வழக்கறிஞர் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு தொழில்முறை தவறாக அமையவில்லை. எனவே மனுதாரர் கோரிக்கையை ஏற்க வேண்டியதில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT