சென்னை: வேட்பு மனுவில் தகவலை மறைத்தது தொடர்பான வழக்குகளை இன்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது இன்று பிற்பகலில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
மதுரை மத்திய தொகுதி வாக்காளர் ஷகிலா தாக்கல் செய்த மனுவில், அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி சார்பில் போட்டியிடும் இயக்குநர் சுந்தர்.சி தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவர் இயக்குநராகவும், பங்கு தாரராகவும் உள்ள அவ்னி டெலி மீடியா, அவ்னி மூவீஸ் மற்றும் அவ்னி சினிமாக்ஸ் நிறுவனங்கள் குறித்த விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிறுவனங்கள் மூலம் கோடிக் கணக்கில் வருவாய் பெற்ற அவர், அது குறித்த விவரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும், இது சம்பந்தமாக விசாரணை நடத்தும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, மனுதாரர் தரப்பில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் முறையிடப்பட்டது.
இதேபோல, வேட்பு மனுக்களில், சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக, அதிமுக வேட்பாளர்கள் ஜெயக்குமார், தங்கமணி, விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், ஆர்.இ.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், த.வெ.க. தலைவர் விஜய், த.வெ.க வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, பாஜக வேட்பாளர் தமிழசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை விசாரணை நடத்தக் கோரிய வழக்குகளையும் விசாரணைக்கு எடுக்கக் கோரியும் முறையீடு செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வேட்பு மனுவில் தகவலை மறைத்தது தொடர்பான வழக்குகளை இன்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.