நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒண்ணாம் சேத்தி பகுதியில் விளைநிலத்தில் தண்ணீர் தேங்கியதால் அழுகிய நெற்பயிர்கள்.
தஞ்சாவூர்: டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
டெல்டா மாவட்டங்களில் நவ. 28-ம் தேதி இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும், குடியிருப்புகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. தஞ்சை மாவட்டத்தில் 15,000 ஏக்கர், நாகையில் 60,000 ஏக்கர், திருவாரூரில் 75,000 ஏக்கர், மயிலாடுதுறையில் 55,000 ஏக்கர் என மொத்தம் 2.05 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
பல்வேறு இடங்களில் வடிகால் வாய்க்கால்களை தூர் வாராததால் மழைநீர் வடிய முடியாமல் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
புயல் காரணமாக நாகை, தரகங்கம்பாடி, பூம்புகார், காரைக்கால் பகுதிகளில் நேற்றும் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசியது. நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவக் கிராமங்களில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. நாகையில் நேற்று காலை வரை அதிகபட்சமாக 15.25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
2 பேர் உயிரிழப்பு: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் செம்பதனிருப்பு வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜா மகன் பிரதாப்(19) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அப்பகுதியில் அறுந்து தொங்கிய மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல, கும்பகோணம் வட்டம் ஆலமன்குறிச்சி உடையார் தெருவைச் சேர்ந்தவர் முத்துவேல் மகள் ரேணுகா(20) என்பவர் நேற்று முன்தினம் அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.