நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இன்றும் பரவலாக மழை நீடித்தது. இன்று காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 232 மி.மீ., நாலுமுக்கில் 220, காக்காச்சியில் 210, மாஞ்சோலையில் 190 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
143 அடி நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 129.55 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 7,308 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 2,800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 103.05 அடியாக இருந்தது. அணைக்கு 4,301 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையிலிருந்து 480 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடியும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடியும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 8 அடியும் உயர்ந்திருந்தது.
அணைகளில் இருந்து பெருமளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும், காட்டாற்று வெள்ளம் வந்து சேர்வதாலும் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியில் குறுக்குத்துறை முருகன் கோயில் கோபுரத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் பாய்ந்தோடியது.
இந்தக் கோயிலுக்கு செல்லும் கல்பாலம் முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டிருந்தது. தாமிரபரணியில் காட்டாற்று வெள்ளம் காரணமாக மேலப்பாளையம் மேலநத்தம் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.