புதுச்சேரி: கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (அக். 26-ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ‘அர்னாப்’ புயலாக மாறி ஆந்திராவின் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதுச்சேரி துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
புயல் காரணமாக புதுச்சேரியில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் புதுச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில் குடியிருப்புகள், தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
பாகூர், திருக்கனூர், மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கன மழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை (26-ம் தேதி) திங்கட்கிழமை மட்டும் விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.