சென்னை: தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (மே15) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, இன்று பகல் அதே பகுதிகளில் நிலவுகிறது.
இதுதவிர, சுமார் 0.9 கிமீ உயரத்தில், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியின் மையப்பகுதிகளிலிருந்து தெற்கு மத்திய மகாராஷ்டிரா வரை, வடக்கு தமிழகம், ராயலசீமா மற்றும் வடக்கு உள் கர்நாடகா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (மே 14) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தேனி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மே 15-ம் தேதி முதல் மே 20-ம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 15-ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மே 16-ம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மே 17-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மே 18-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி ஆகிய 7 மாவட்டங்களிலும், மே 19-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
மே 18-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைஒட்டியே இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வியாழன், வெள்ளிக்கிழமை (மே 15, 16) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மே 17-ம் தேதி பலத்த சூறாவளி காற்று வீசுக்கூடும். இதுபோல, அந்தமான் கடல்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதி, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதி, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 18-ம் தேதி பலத்த சூறாவளி காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மேற்படி தேதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.