சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (ஏப்.5) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை உள் கர்நாடகா வழியாக சுமார் 900 மீட்டர் உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஏப்.5) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 6-ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 7-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலிலும், 8 முதல் 10-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை (ஏப்.5) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களிலும், நாளை மறுநாள் விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட தமிழகத்தில் நாளை முதல் 7-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்கக்கூடும். தென்தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட அளவை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.