சென்னை: தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஆக.18-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஆக.17) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஆகஸ்டு 18-ம் தேதி செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும், 19-ம் தேதி நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மேற்கூறிய இரு நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 4 செமீ, இளையான்குடி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், கறம்பக்குடி, நீலகிரி மாவட்டம் வூட் பிரையர் எஸ்டேட், செருமுள்ளி, பந்தலூர் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.