சென்னை: தமிழகத்தில் இன்று டெல்டா உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரிக்கடல் முதல் தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக சுமார் 900 மீட்டர் உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்றும், நாளையும் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 11 முதல் 14-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
இன்றும், நாளையும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, நாமக்கல், கரூர் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.