கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தைச் சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது.
கடலூர்/புதுச்சேரி: கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரியில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை தொடர்ந்து 11 மணி நேரம் மழை பெய்தது.
கடலூர்: கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தொடர்ந்து நேற்று மதியம் வரை பெய்தது. மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்ததால் விளைநிலங்கள், குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெய்வேலி - விருத்தாசலம் சாலை, குள்ளஞ்சாவடி - ஆலப்பாக்கம் சாலை உட்பட பல இடங்கள் மழைநீரில் மூழ்கின.
நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தொழுதூர் அணைக்கட்டுக்கு 30 ஆயிரம் கனஅடி அளவுக்கு நீர்வரத்து அதிகரித்தது. முன்னறிவிப்பின்றி அதிக நீர்வரத்து இருந்ததால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் வெள்ளாற்றில் அந்த நீரை திறந்துவிட்டதுடன், கரையோர கிராமங்களுக்கு வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வெள்ளாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் ஆற்றுக்குள் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது ஏறி நின்ற தொழிலாளர்கள்.
பெரம்பலூர்: தொழுதூர் அணையில் இருந்து முன் அறிவிப்பின்றி தண்ணீர் திறக்கப்பட்டதால், வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 9 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லப்பைக்குடிக்காட்டை அடுத்த வெள்ளாற்றில் உள்ள திடல் போன்ற பகுதியில், சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த 9 பேர் கொண்ட குழுவினர் அண்மையில் பொருட்காட்சி அமைத்திருந்தனர். இந்தப் பொருட்காட்சி 3 நாட்களுக்கு முன்பு நிறைவடைந்ததால் பொருட்களை அகற்றும் பணியைத் தொழிலாளர்கள் தொடங்கினர்.
இதற்கிடையே, தொழுதூர் அணையில் இருந்து வெள்ளாற்றில் முன்னறிவிப்பின்றி விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக, வெள்ளாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பொருட்காட்சித் திடலில் பணியில் இருந்த தொழிலாளர்கள் 9 பேரும் ஆற்று வெள்ளத்தில் சிக்கினர். இதனால், தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஆற்றுக்குள் நிறுத்தப்பட்டிருந்த மினி லாரி மற்றும் வேன் மீது ஏறி நின்றனர்.
தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து, கயிறு மூலம் 9 தொழிலாளர்களையும் வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்டனர். அந்தப் பகுதியில் வெள்ளப் பாதிப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று, உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
புதுச்சேரி: புதுச்சேரியில் 9.7 செ.மீ மழை பதிவாகியது. மழை கொட்டி தீர்த்ததால் புதுச்சேரி உப்பனாறு வாய்க்கால் உள்ளிட்ட பிரதான வாய்க்கால்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் வீடுகளில் மழைநீர் புகுந்தது.
பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வெளியே செல்ல முடியாமல் விடுதிகளில் முடங்கினர். மீனவர்கள் நாளை (அக்.27) வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதி்க்கப்பட்டது.
வெள்ளாற்றில் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் தீயணைப்பு வீரர்கள்.
கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அடுக்கம் கிராமமே தனித்தீவாக மாறியது. கனமழை எச்சரிக்கை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் இன்றும் மூடப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை: கன மழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று (அக்.26) விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
கோவை, திண்டுக்கல் பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக கோவை, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (அக்.26) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: புயல் சின்னம் காரணமாக சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டுள்ளது.