இடம்: சென்னை | படம்: ஜோதி ராமலிங்கம்

 
தமிழகம்

சென்னை, திருவள்ளூரில் வெளுத்து வாங்கும் கனமழை - வாகன ஓட்டிகள் தவிப்பு

வெற்றி மயிலோன்

சென்னை: சென்னை மற்றும் திருவள்ளூரில் கனமழை நீடித்து, பல முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மாலை 6 மணிக்குப் பின் சென்னை மற்றும் திருவள்ளூரின் பல இடங்களில் கனமழை நீண்ட நேரம் வெளுத்து வாங்கியது. இரவு 10 மணி வரை அதி கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

வங்கக் கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இருப்பினும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சென்னையில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கின. சென்னையில் பல முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இன்று சென்னையில் பள்ளி, கல்லூரிகளும் இயங்கியதால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மாலை 5.30 மணி வரை நுங்கம்பாக்கத்தில் 94.6 மி.மீ, மீனம்பாக்கத்தில் 53.5 மி.மீ, எண்ணூரில் 98.5 மி.மீ, புழலில் 119 மி.மீ, பள்ளிக்கரணையில் 65.5 மி.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், தேனி, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், கோவை, திண்டுக்கல் ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களிலும் இன்று மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளையும் சென்னையில் அதி கனமழை: இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மண்டல இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் அளித்த பேட்டியில், “தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில், வடதமிழகம் மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காலை 11: 30 மணி அளவில் சென்னைக்கு கிழக்கே 50 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து சென்று அடுத்த 12 மணி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும்.

அதனால் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் திருவள்ளூரில் கன முதல் மிக கனமழைக்கும், ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. நாளை (டிச.2) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: இதனிடையே, கனமழை நீடித்து வருவதன் எதிரொலியாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு மழை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT