சென்னை: வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையும். இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 50 கி.மீ தொலைவில் நீடித்து வருகிறது. இது இன்று (டிச.2) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு இணையாக வடக்கு நோக்கி நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவக்கூடும்.
அப்பொழுது, சென்னையிலிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலத்துக்கு இடையிலான குறைந்தபட்ச தூரம் 30 கி.மீ ஆக இருக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், 3 முதல் 7-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைபெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று காலை முதல் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீன வர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.