சென்னை: செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆக.17 முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியருப்பதாவது: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஆக.16) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
17-ம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
18-ம் தேதி செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
19-ம் தேதி நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 செமீ, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவக்குடியில் தலா 8 செமீ,
கோவை மாவட்டம் உபாசி, சின்கோனா, சோலையார், தஞ்சாவூர் மாவட்டம் மஞ்சளாறு, விழுப்புரம் மாவட்டம் சிறுவாடியில் தலா 7 செமீ, கோவை மாவட்டம் வால்பாறையில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.