சென்னை: தமிழகத்தில் மதுரை, கோவை, நீலகிரி, குமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழையும், டெல்டா உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு கடலோர கேரள பகுதிகளின் மேல் சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு கடலோர கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து தெற்கு உள் கர்நாடகா வரை சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (அக்.9) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நாளை ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அக்.10-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
அக்.11, 12 தேதிகளில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு அல்லது அதிகாலை நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோடநாடு, கோவை மாவட்டம் கீழ் நீராறு அணையில் தலா 7 செமீ, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, பெரம்பலூர் மாவட்டம் தழுதலையில் தலா 5 செமீ, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 4 செமீ திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், நீலகிரி மாவட்டம் ஆதார் எஸ்டேட், குன்னூர், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.