கோப்புப் படம்

 
தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை (ஜூன் 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து கேரள கடலோர பகுதிகள் வரை சுமார் 3.1 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூன் 17) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஜூன் 18-ம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

19-ம் தேதி தெற்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும். இதர தமிழக பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 20-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 21-ம் தேதி டெல்டா மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும்.     

தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நகரின் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 20-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் 4 செமீ, சென்னை ஐஸ் ஹவுஸில் 3 செமீ, அரியலூர் மாவட்டம் செந்துறை, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், திருப்பூர் மாவட்டம் பல்லடம், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT