சென்னை: தமிழகத்தில் நாளை கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழையும், 13 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு உள் கர்நாடகாவிலிருந்து குமரிக் கடல் பகுதிகள் வரை தெற்கு உள் கர்நாடகம் மற்றும் தமிழகம் வழியாக சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூன் 29) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு, சேலம் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
30-ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாமக்கல், ஈரோடு, சேலம், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
ஜூலை 1-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், நாமக்கல், ஈரோடு, சேலம் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 2-ம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜூலை 3-ம் தேதி திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் ஜூலை 2-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே, 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகை ஏரியில் 8 செமீ, திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூரில் 7 செமீ, சென்னை கொரட்டூர், அயப்பாக்கம், நெற்குன்றம், கொரட்டூர், வளசரவாக்கம், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், ஊத்துக்கோட்டை. புழலில் தலா 6 செ.மீ., திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், சோழவரம், அண்ணா நகர் மேற்கு, வில்லிவாக்கம், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.