படம்: வீ.தமிழன்பன்

 
தமிழகம்

டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

செய்திப்பிரிவு

வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. டிட்வா புயல் காரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த மழையால் மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் பகுதியில் சிவகாமி நகர், சுந்தரம் மீனா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 2 நாட்களாக பெய்த மழைநீர், வடிகால் இல்லாததால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளது. இதனால், 200 வீடுகளில் வசிப்போர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரத்தநாடு பகுதியில் நெய்வாசல், குலமங்கலம், பருத்திக் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சம்பா, தாளடி நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. வடிகால்களை முறையாக தூர் வாராததால் மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மாவட்டம் முழுவதும் 15 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும், மாவட்டம் முழுவதும் 9 வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன. ஒரத்தநாடு அருகே கக்கரைக்கோட்டை கிழக்கு பகுதியைச் சேர்ந்த இயேசு என்பவருக்கு சொந்தமான 50 ஆடுகள் மழையின் தாக்கத்தால் உயிரிழந்தன.

மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி பதிவான மழையளவு(மில்லி மீட்டரில்): குருங்குளம் 124 மி.மீ., ஈச்சன்விடுதி 112, நெய்வாசல் 109, ஒரத்தநாடு 104, அய்யம்பேட்டை 93, பேராவூரணி 92, வெட்டிக்காடு 90, பட்டுக்கோட்டை 88, திருவிடைருதூர் 88, பூதலூர் 86, மஞ்சளாறு 86, மதுக்கூர் 86, திருவையாறு 79, தஞ்சாவூர் 77, வல்லம் 70, அணைக்கரை 70, அதிராம்பட்டினம் 67, திருக்காட்டுப்பள்ளி 62, பாபநாசம் 59, கும்பகோணம் 51, கல்லணை 36.

நாகை மாவட்டத்தில்...

நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக விடிய விடிய பரவலாக மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. நாகை சாலமன் தோட்டம், பாப்பாகோவில், நரியங்குடி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் 90-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புயல் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. கடலோர பகுதிகளில் தரைக்காற்று பலமாக வீசி வருகிறது. இதனால், மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் 750 விசைப்படகுகள், 3,500 பைபர் படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாவட்டத்தில் 60,000 ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. ஏற்கெனவே பெய்த மழையால் நீரில் மூழ்கிய பயிர்கள் தற்போது அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் கவலையடைந்துள்ள விவசாயிகள், பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று காலை வரை பெய்த மழையளவு(சென்டி மீட்டரில்): நாகை 15.25, திருப்பூண்டி 13.07, வேளாங்கண்ணி 11.74, திருக்குவளை 11.22, தலைஞாயிறு 10.12, வேதாரண்யம் 10.58, கோடியக்கரை 11.12.

திருவாரூர் மாவட்டத்தில்...

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 75,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் 5 இடங்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் நேற்று காலை வரை பதிவான மழையளவு(சென்டி மீட்டரில்): திருவாரூர் 13.7, நன்னிலம் 12.44, முத்துப்பேட்டை 11.3, வலங்கைமான் 8.96, மன்னார்குடி 9.6, நீடாமங்கலம் 9.3, குடவாசல் 7.4, திருத்துறைப்பூண்டி 7.3.

படம்: வீ.தமிழன்பன்

மயிலாடுதுறை மாவட்டத்தில்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று லேசான மழை விட்டுவிட்டு பெய்தது. ஆனாலும், தொடர் மழையால் பல இடங்களில் நீர் தேங்கியுள்ளதால் 2-வது நாளாக நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது. 55,000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதாக வேளாண் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடி, காழியப்பநல்லூர், எடுத்துக்கட்டி, சாத்தனூர், சந்திரப்பாடி, கூழையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

மயிலாடுதுறை அருகே கீழபட்டமங்கலம் ஊராட்சியில் 2 வீடுகள் சேதமடைந்தன. இதில், வரதராஜன் மனைவி காந்தி காயமடைந்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பதிவான மழையளவு(மில்லி மீட்டரில்): மயிலாடுதுறை 9.20, மணல்மேடு 5, சீர்காழி 9.10, கொள்ளிடம் 7.20, தரங்கம்பாடி 12.20, செம்பனார்கோவில் 12.

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று முழுவதும் விட்டுவிட்டு லேசான மழை பெய்தது. கனமழை காரணமாக காரைக்கால் நகரப் பகுதியில் செல்லம்மாள் நகர், ஜாபர் மரைக்காயர் தெரு, மாஸ் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. மழையின் தீவிரம் குறைந்திருந்ததால் சில இடங்களில் நீர் வடியத் தொடங்கியது. திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான வயல்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT