சென்னை: தமிழகத்தில் நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பகுதிகளின் மேல் சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
கடலோர ஆந்திரப் பிரதேசத்திலிருந்து மத்திய மகாராஷ்டிரா வரை, வடக்கு தெலங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மராத்வாடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் வழியாக சுமார் 3.1 கி.மீ. முதல் 4.5 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இவை காரணமாக நாளை (ஜூன் 28) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் நாளை கனமழை பெய்யக்கூடும்.
29-ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
ஜூன் 30 முதல் ஜூலை 3-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் ஜூலை 1-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் வேதியரேந்தல், விருதுநகர் மாவட்டம் புல்வாய்க்கரையில் தலா 5 செ.மீ., விருதுநகர் மாவட்டம் ஆவியூர், சிவங்கை மாவட்டம் திருப்புவனம், ஈரோடு, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.