சென்னை: திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு அதிகரித்துவிட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்- அமைச்சர்கள் இடையே காரசார விவாதம் நடந்தது.
உதயகுமார்: ஆளுநர் உரையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எந்த குறிப்பும் இடம்பெறவில்லை. அதிமுக ஆட்சியில் கிலோ ரூ.45-க்கு விற்கப்பட்ட அரிசி இப்போது ரூ.75-க்கு உயர்ந்துள்ளது.
உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி: திமுக ஆட்சிக்காலத்தில் நெல் கொள்முதல் விலை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக அரிசி விலை உயர்ந்திருக்கலாம்.
பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு: விலைவாசி உயர்வுக்கு ஜிஎஸ்டிதான் காரணம். தமிழகத்தில் தனிநபர் வருமானம் ரூ.3.15 லட்சமாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்ந்தாலும் அது கட்டுக்குள் இருக்கிறதா என்பதே முக்கியம்.
உதயகுமார்: அதிமுக ஆட்சிக் காலத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த விலை நிலைப்படுத்தும் நிதி ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன்: இப்போதும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உதயகுமார்: தனிநபர் கடனும் ரூ.1.26 லட்சமாக உயர்ந்துள்ளது.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: திமுக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கமாக அதிகரித்து 11.19 சதவீதத்தை எட்டியுள்ளது. தேசிய சராசரி வளர்ச்சிகூட 6.6 சதவீதம்தான் என்றார்.
தொடர்ந்து உதயகுமார் பேசும்போது, "நிரந்தர டிஜிபி நியமிக்கப்படாததால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, பாலியல் குற்றம்
அதிகரித்திருப்பதாக கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், தனிநபர் மோதலை வைத்து சட்டம் ஒழுங்கு பாதித்ததாக சொல்லக் கூடாது என்றார்.
தொடர்ந்து உதயகுமார் பேசும்போது, "20 லட்சம் மடிக் கணினி வழங்கப்படும் என்று சொன்னீர்கள். தற்போது 10 லட்சமாக சுருங்கிவிட்டது" என்றார். இதற்கு அமைச்சர் கோவி.செழியன் பதிலளிக்கும்போது, "அரசு, உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமின்றி தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் மடிக்கனினி வழங்கியுள்ளோம். அடுத்த ஆண்டில் முதலாண்டு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும்" என்றார்.