உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன்
சென்னை: நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்படும் லஞ்சம் தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக - தவெக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசுகையில், “முந்தைய ஆட்சிக் காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கும் 40 முதல் 50 ரூபாய் லஞ்சமாக பெறுவது நடைமுறையாக இருந்து வந்தது” என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “பொதுப்பணித் துறை அமைச்சர் பேசும்போது, 50 ரூபாயை அரசே அவர்களுக்கு வழங்கி, லஞ்சம் பெறாத அளவுக்கு மாற்றுவோம் என்றார். நீங்களும் இப்படிச் சொல்லுங்கள்.
இதை விட்டுவிட்டு கடந்த காலத்தில் நடந்தை மட்டும் பேச வேண்டாம். தற்போதும் 50 ரூபாய் லஞ்சம் கொடுப்பதை அமைச்சரே நேரடியாக சென்று ஆய்வு செய்திருக்கிறார்” என்று அவர் சொன்னார். இதற்கு பதிலளித்த அமைச்சர் வெங்கட்ரமணன், ”இதைக் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதற்கிடையில் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருந்தது உண்மை; இதைத் தடுக்கவே விவசாயிக்கு ரொக்கமாக பணம் கொடுப்பதை தவிர்த்து, காசோலையாக வழங்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
இதனிடையே பேசிய அமைச்சர் என்.ஆனந்த், “இது போன்ற எந்தவித தவறும் நடக்க கூடாது என்பதுதான் முதல்வரின் நிலைப்பாடு” என்றார்.