சென்னை: கடந்த 70 ஆண்டுகளாக நிறைவேறாத நந்தன் கால்வாய் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக - அதிமுக இடையே நேற்று காரசார விவாதம் நடைபெற்றது. இத்திட்டம் தவெக ஆட்சியில் நிறைவேறும் என்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற பொதுப்பணி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை மீதான விவாதம்:
சிவக்குமார் (பாமக): விக்கிரவாண்டி தொகுதியில் 27 கிராமங்களின் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். விக்கிரவாண்டி எம்எல்ஏவாக கோவிந்தசாமி இருந்தபோது, 1952-ம் ஆண்டு நந்தன் கால்வாய் திட்டத்தை கொண்டு வந்தார்.
இதுவரை இந்த திட்டம் குறித்து பேசாத அரசியல் தலைவர்களே இல்லை. ஆனால், இன்னும் அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: நீர்வளத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நாளை (இன்று) நடக்கிறது. அந்த துறை அமைச்சரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்கிறீர்கள். பொதுப்பணி, நெடுஞ்சாலை குறித்து கேட்டீர்கள் என்றால், என்னுடைய விளக்க உரைக்கு எளிதாக இருக்கும்.
எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் (திமுக): திமுக ஆட்சியில், நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்து, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.
சி.வி.சண்முகம் (அதிமுக): நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த கடந்த 70 ஆண்டுகளாக யாருடைய ஆட்சியிலும் முனைப்பு காட்டவில்லை.ஆனால், முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, நான் அமைச்சராக இருந்தேன். 8 ஆண்டுகளுக்கு முன்பு, முதல்முறையாக நந்தன் கால்வாயை தூர்வாருவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, தூர்வாரப்பட்டது.
திமுக உறுப்பினர் நிதி ஒதுக்கியதாக சொல்கிறார். எப்படி பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கினீர்களோ அப்படித்தான் இதுவும். இதுவரை எந்த திட்டமும் அங்கு நடைபெறவில்லை.
எ.வ.வேலு (திமுக): நந்தன் கால்வாய் திட்டம் நீண்ட நெடிய காலமாக கேட்டுக்கொள்ளப்பட்ட ஒரு திட்டம். அந்த கால்வாய் அதிமுக ஆட்சியில் தூர்வார ஏற்பாடு செய்யப்பட்டதை மறுக்கவில்லை. அந்த திட்டத்தின் நோக்கம் என்பது, சாத்தனூரின் உபரிநீர், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏறத்தாழ 11 ஏரிகளில் நிரப்பி, அங்கு விவசாயம் பார்க்கப்பட்டு, அதற்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்தை வந்து சேர்வதுதான்.
ஆனால், அது செயல்படுத்தப்படவில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வாக்குறுதி கொடுத்தது. இதற்கான நில எடுப்புக்காக நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது.
சிவக்குமார் (பாமக): இந்த விவகாரத்தில் நான் யாரையும் குறை சொல்லவில்லை.
பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர்: இவ்வளவு ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் இருக்கும் நந்தன் கால்வாய் திட்டம், தவெக ஆட்சியில்தான் நிறைவேறப் போகிறது என்ற அறிவிப்பை நான் நிச்சயம் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.