சென்னை: நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பாஜக - காங்கிரஸ் - அதிமுக உறுப்பினர் கள் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:
தாரகை கத்பர்ட் (காங்கிரஸ்): நீட் போன்ற தேர்வுகள் வருவதற்கு காங்கிரஸ் கட்சி காரணமாக இருந்ததாக நேற்று (ஆக.17) அதிமுக உறுப்பினர்கள் பேசினார்கள். காங்கிரஸ் கொண்டுவந்த எத்தனையோ திட்டங்களை தடுத்து நிறுத்தக் கூடிய பாஜக அரசால், ஏன் நீட் தேர்வை நிறுத்த முடியவில்லை.
போஜராஜன் (பாஜக): காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் நீட் தேர்வு கொண்டு வந்ததாக, காங்கிரஸ் உறுப்பினரே தெரிவித்ததற்கு நன்றி. பாஜக அரசு நீட் தேர்வை தடுத்து நிறுத்தி இருக்கலாமே என்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படிதான் நீட் தேர்வு நடக்கிறது. அதனால், நீட் தேர்வை நிறுத்த முடியவில்லை. நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் யார் வாதாடினார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
தாரகை கத்பட் (காங்கிரஸ்): நீட் தேர்வு எந்தெந்த மாநிலத்துக்கு தேவையோ, அந்தந்த மாநிலத்துக்கு கொண்டு வரலாம் என்றுதான் நாங்கள் அப்போது சொன்னோம்.
காங்கிரஸ் கொண்டுவந்த அனைத்து திட்டங்களும் திருத்தம் செய்யப்பட்டுவருகின்றன. மாணவர்களுக் கான நீட் தேர்வு சட்டத்திலும் திருத்தம் கொண்டு வரலாமே?
ஒரே ‘ஜீன்’தான்
சி.வி.சண்முகம் (அதிமுக): நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டு வந்தது என்றும், பாஜக ஏன் நீட் தேர்வை நடத்துகிறது என்றும் பேரவையில் அந்தந்தக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் பேசினர்.
காங்கிரஸ், பாஜக இரண்டும் வெவ்வேறு கட்சிகள் என்றாலும், அவர்கள் உடலில் இருப்பது ஒரே ஜீன்தான். யார் ஆட்சிக்கு வந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில்தான் நீட் தேர்வைக் கொண்டு வந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நீக்குவதற்கு சட்டம் கொண்டுவர நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது.
இதற்கு பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன. பிரதமராக ராஜீவ்காந்தி இருந்தபோது, விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்கக்கூடாது என்ற மதக்கோட்பாடு முன்பு இருந்தது.
ஆனால், 1984-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அதை மாற்றி யமைத்து ஜீவனாம்சம் வழங்க வேண்டுமென உத்தரவிட்டது. அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி நாடாளுமன்றத்தில் சட்டத்தை இயற்றி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்று மாற்றினார்.
அதேபோல் தற்போது, மாநில அரசுகளுக்கு கனிம வளங்கள் மீதான ராயல்டியை வசூலிக்கும் உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், தீர்ப்பு வந்த 6 மாதங்களுக்குள்ளாகவே, சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய பாஜக அரசு செல்லாத தாக்கியுள்ளது.
சட்டம் இயற்றியிருக்கலாம்
எனவே, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆளும்போது மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நாடாளுமன்றத்தில் சட்டத்தைக் கொண்டு வந்து மாணவர்களின் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்.
ஆனால், இவர்கள் அரசியல் செய்வதற்காகத்தான் நீட் தேர்வு உதவுகிறது. அப்பாவி மாணவர்கள் தான் உயிரிழக்கின்றனர். தளவாய் சுந்தரம்
(அதிமுக):கடந்த 2013-ல் நீட் வழக்கில் தீர்ப்பு வந்தபோது 2 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீட் வேண்டாம் என்று உத்தரவிட்டனர்.
ஆனால், ஒரே ஒரு நீதிபதிதான் நீட் தேவை என்று உத்தரவிட்டார். காங்கிரஸ் நினைத்திருந்தால் அப்போதே உச்ச நீதிமன்ற வழக்கை முடித்து நீட்டை தடுத்திருக்கலாம். ஆனால் அதைச் செய்யவில்லை. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.