தமிழகம்

100 நாள் வேலைத் திட்டம் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்துக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டுள்ள ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ சட்டப் பிரிவுகளை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சிவஞானசம்பந்தன் தாக்கல் செய்திருந்த மனுவில், “கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2005-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள், ஏழை, எளியோருக்கு 100 நாட்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் மத்திய அரசு திடீரென இந்த சட்டத்தை மாற்றியமைத்து, ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ என பெயர் மாற்றம் செய்துள்ளது.

          

ஏற்கெனவே இருந்த திட்டத்தில் மத்திய அரசு 90 சதவீத நிதியையும், மாநில அரசு 10 சதவீத நிதியையும் பங்களிப்பாக வழங்கி வந்தன. ஆனால் புதிய சட்டப்படி வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் 40 சதவீத நிதியை பங்களிப்பு நிதியாக வழங்க வேண்டும். மேலும், புதிய சட்டத்தில் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் கிராம சபைக் கூட்டங்களுக்கான அதிகாரமும் பறிக்கப்பட்டுள்ளது. எங்கு பணி செய்ய வேண்டுமென்பதை மத்திய அரசுதான் அறிவிக்கும் என்பதால் கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

எனவே இந்த புதிய சட்டத்தில் உள்ள 8 பிரிவுகள் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக இருப்பதால் அவற்றை செல்லாது என அறிவித்து ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் கூடுதல் தகவல்களைச் சமர்ப்பிக்க அவகாசம் வழங்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT