மதுரை: மதுரை நத்தம் மேம்பாலத்தில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்து காரணமாக சித்திரை திருவிழா பார்க்க வந்த இரண்டு இளைஞர்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் சல்மான் கான் (21), விஷ்வா(21) விக்னேஷ் (22).இவர்கள் மூவரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவைப் பார்க்க நத்தத்திலிருந்து ஒரே பைக்கில் நேற்று இரவு மதுரைக்கு வந்தனர். பைக்கை சல்மான் கான் ஓட்டியுள்ளார். நள்ளிரவு 12:30 மணிக்கு நத்தம் மேம்பாலத்தில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.
எதிரே மற்றொரு பைக்கில் மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த மாதேஷ் (27) என்பவர் ஒரு வழி பாதையில் சென்றுள்ளர். இவர் ஒரு வழி பாதையில் வருவதை சல்மான் கான் சற்றும் எதிர்பார்க்காவில்லை. இதனால், அவரது பைக், மாதேஷ் பைக் மீது மோதியது. இதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
காயம் அடைந்த அவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனாலும், சல்மான் கான் விஷ்வா, மாதேஷ் ஆகியோர் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த விக்னேஷ் சிகிச்சை பெறுகிறார். சம்பவம் குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். சித்திரை திருவிழா பார்க்க வந்த இரண்டு இளைஞர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.