சென்னை: சர்வதேச தரத்துக்கு தமிழக சுகாதாரத் துறையை கொண்டு செல்ல கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று, அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுகாதார குறியீடுகளில் இப்போதும் தமிழகம் தான் முன்னிலை வகிக்கிறது. அதற்கு நம் சுகாதாரத் துறையின் வலுவான கட்டமைப்பு தான் காரணம்.
சர்வதேச தரத்துக்கு நம் சுகாதாரத் துறையை கொண்டு செல்ல வேண்டுமென்றால், கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செய்ய வேண்டும்.
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளநிலையில், அதற்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை அதிகரிக்கப்படவில்லை. தமிழகத்தில் 19 ஆயிரம் அரசு மருத்துவர்கள் தான் உள்ளனர்.
அதனால், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை 2 மடங்காக அதிகரிக்க வேண்டும். சில தினங்களுக்கு முன்பு, தலைமை செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சுகாதாரத் துறையில் நிரந்தர பணி கிடையாது என அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது சுகாதாரத் துறைக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துவதாக அமையும். மக்கள் உயிரை காப்பாற்ற போராடும் அரசு மருத்துவர்களை தங்கள் ஊதியத்துக்காக போராட வைப்பது அரசுக்கு அழகல்ல.
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உடனடியாக ரூ.10 லட்சம் நிவாரணத்தை முதல்வர் அறிவித்தார்.
ஆனால், கரோனா பேரிடரில் மக்களை காப்பாற்ற போராடி உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் அரசு இதுவரை 10 காசு கூடநிவாரணமாக தரவில்லை. அதுபோல, கரோனா பணியில் உயிர் இழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவி ஒரு அரசு வேலைக்காக 5 ஆண்டுகளாக கண்ணீர் சிந்திய பிறகும் அரசு கருணை காட்ட மறுக்கிறது.
இதுபோன்று அரசு நடந்து கொண்டால், எதிர்காலத்தில் கரோனா போன்று ஏதாவது கொள்ளை நோய் வந்தால் எப்படி மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து, அர்ப்பணிப்போடு பணியாற்ற முன் வருவார்கள் என அரசு நினைத்து பார்க்க வேண்டாமா. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.