சென்னை: ‘தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் செஃப் தாமு’ என்று தமிழக முதல்வர் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல் நலக்குறைவு காரணமாக இன்று (அக்.25) காலமானார். அவருக்கு வயது 72.
உடல்நல பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சமையல் கலைஞர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்று அழைக்கப்படும் கே.தாமோதரனின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.
2010 ஆம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததோடு, பத்மஸ்ரீ விருதும் பெற்ற பெருமைக்குரியவர். அவரது மறைவு சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பாகும்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சமையல் கலையை நேசிக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளார் டிடிவி தினகரன் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரும், அக்கலையின் பெருமையை உலகறியச் செய்து கின்னஸ் சாதனை படைத்தவருமான பத்மஸ்ரீ தாமு உடல்நலக் குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
சமையலை ஒரு தொழிலாகக் கருதாமல், அதனை ஓர் உன்னதக் கலையாக உயர்த்திக் காட்டிய தாமுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக சமையல் கலை நிபுணர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடிநிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.