சென்னை: 15 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த திருவான்மியூர் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 2 பெண்கள் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவான்மியூரைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு ஜூனில் முன்விரோதம் காரணமாக ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, 16 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை 7-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் பி. வேல்முருகன், எம். ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன் ஆஜராகி, கொலையை நேரில் பார்த்த ஏழுமலையின் மனைவி மற்றும் குழந்தைகளின் வாக்குமூலங்களை அமர்வு நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்றும், சிறிய முரண்பாடுகளை காரணம் காட்டி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் ஒட்டுமொத்தமாக விடுதலை செய்துள்ளது எனவும் வாதிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் இறந்து விட்ட நிலையில், எஞ்சிய 9 பேர் மீதான வழக்கை விசாரி்த்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த கொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான கொலைக்குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, அனைவரையும் விடுதலை செய்தது ஏற்புடையதல்ல.
எனவே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 9 பேரையும் குற்றவாளிகள் என அறிவிக்கிறோம் என தெரிவித்து விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தனர். மேலும், கடந்த வாரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஸ்டீபன்ராஜ், சந்துரு ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.
எஞ்சிய 7 பேர் மீதான தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக அவர்களை பிப்.16 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட லட்சுமி, செல்வி என 2 பெண்கள் உள்பட சரவணன், அப்புனு, குருமூர்த்தி, ஹரிஹரன், நாகராஜன் ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் நீதிபதிகள் ஏற்க மறுத்து சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.