தமிழகம்

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம்

செய்திப்பிரிவு

சென்னை: தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்ள நிலை​யில், திருச்சி கிழக்​கு, கரூர், விராலிமலை, பெருந்​துறை, அம்​பாச​முத்​திரம் ஆகிய 5 தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தல் அறி​விப்பை வெளி​யிடக் கூடாது என தேர்​தல் ஆணை​யத்​துக்கு இடைக்​காலத் தடை விதித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்தலில் சென்னை பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகு​தியை ராஜி​னாமா செய்​தார். இந்த நிலையில் திருச்சி கிழக்​கில் அவர் வெற்றி பெற்​றதை எதிர்த்​து, அத்​தொகுதி திமுக வேட்​பாளர் இனிகோ இருதய​ராஜ் தேர்​தல் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

இதே​போல, கரூரில் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கரின் (அதி​முக) தேர்​தல் வெற்​றியை எதிர்த்து தவெக வேட்​பாளர் வி.பி.ம​தி​யழகன், விராலிமலை​யில் சி.​விஜய​பாஸ்​கரின் (அதி​முக) வெற்​றியை எதிர்த்து திமுக வேட்​பாளர் கே.கே.செல்​லப்​பாண்​டியன், பெருந்​துறை​யில் எஸ்​.ஜெயக்​கு​மாரின் (அதி​முக) வெற்​றியை எதிர்த்து திமுக வேட்​பாளர் தோப்பு வெங்​க​டாச்​சலம் ஆகியோர் தேர்​தல் வழக்கு தொடர்ந்​துள்​ளனர். அம்​பாச​முத்​திரத்​தில் இசக்கி சுப்​பையா (அதி​முக) வெற்றி பெற்​றது செல்​லாது என்று அறிவிக்​கக் கோரி தொகுதி வாக்​காளர் காந்​தி​ம​தி​நாதன் தேர்​தல் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

இதற்​கிடையே, அதி​முக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், சி.​விஜய​பாஸ்​கர், எஸ்​.ஜெயக்​கு​மார், இசக்கி சுப்​பையா ஆகிய 4 பேரும் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்​தனர். இந்​நிலை​யில், தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்ள மேற்​கண்ட 5 தொகு​தி​களுக்​கும் இடைத் தேர்​தல் நடத்த தடை விதிக்​கு​மாறும், தேர்​தல் அறி​விப்பை வெளி​யிடக் கூடாது என தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விடு​மாறும் கோரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பாளை​யங்​கோட்​டையைச் சேர்ந்த வழக்​கறிஞர் கே.வெங்​க​டாஜலபதி பொதுநல வழக்கு தொடர்ந்​தார்.

‘தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் இருக்​கும்​போது இடைத் தேர்​தல் நடத்​தப்​பட்​டால், வழக்​கின் நோக்​கம் அர்த்​தமற்​ற​தாகி​விடும். வழக்​கு​களை நிலு​வை​யில் வைத்​துக் கொண்டு இடைத் தேர்​தலை நடத்​தி​னால், தேவையற்ற சட்ட சிக்​கலை ஏற்​படுத்​தி​விடும்’ என்று அவர் தெரிவித்திருந்தார். உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நடை​பெற்ற வாதம்: மனு​தா​ரர் தரப்​பு வழக்​கறிஞர் வி.ஆர்​.சண்​முக​நாதன்: நிலுவை வழக்கு விசா​ரணைக்​குப் பிறகு, தேர்​தலில் தோல்​வி அடைந்​தவரை வெற்றி பெற்​றவ​ராக உயர் நீதி​மன்​றம் ஒரு​வேளை அறிவிக்​கக்​கூடும். அதே நேரம், இடைத் தேர்​தலில் ஒரு எம்​எல்ஏ தேர்ந்​தெடுக்​கப்​பட்​டால், ஒரே தொகு​திக்கு 2 எம்​எல்​ஏக்கள் என்ற நிலை உரு​வாகும். எனவே, தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் இருக்​கும்​வரை அந்த தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தல் நடத்​தக்கூடாது என உச்ச நீதி​மன்​றம் பல​ வழக்​கு​களில் தீர்ப்​பளித்​துள்ளது.

தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் ஆஜரான மத்​திய அரசின் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஏஆர்​எல். சுந்​தரேசன் மற்​றும் நிரஞ்​சன் ராஜகோ​பாலன்: பல தேர்​தல் வழக்​கு​கள் குறை​பாடு​களு​டன் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. அதுகுறித்த ஆவணங்​கள் தேர்​தல் ஆணை​யத்​துக்கு வரவில்​லை. அதனால், அவற்​றின்​மீது தேர்​தல் ஆணை​யம் எந்த நிலைப்​பாட்​டை​யும் எடுக்க முடி​யாது. மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்​டப்​படி, காலி​யாக உள்ள தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தல் நடத்துவது அவசி​ய​மான ஒன்​று.

தமிழக அரசின் தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண்: தேர்​தல் வழக்​கு​கள் தொடரப்​படு​வதற்கு முன்பே முதல்​வர் விஜய் உள்​ளிட்​டோர் தங்​கள் எம்​எல்ஏ பதவி​களை ராஜி​னாமா செய்​து​விட்​டனர். அவர்​கள் ராஜி​னாமா செய்​யும்​போது எந்த தேர்​தல் வழக்​கும் நிலு​வை​யில் இல்​லை. முதல்​வர் விஜய் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் ஜி.​மாசிலாமணி: மனு​தா​ரர் இத்தொகு​தி​களின் வாக்​காளர் அல்ல.அவர் வழக்கு தொடர எந்த முகாந்​திர​மும் இல்​லை. மேலும், காலி தொகு​தி​களில் இடைத் தேர்​தல் நடத்​து​வ​தா, வேண்​டாமா என முடிவு எடுக்​கும் அதி​காரம் தேர்​தல் ஆணை​யத்​துக்கு மட்​டுமே உள்​ளது. இவ்​வாறு வாதம் நடந்​தது.

இதையடுத்​து, நீதிப​தி​கள் பிறப்​பித்​துள்ள உத்​தர​வு: தேர்​தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தலை நடத்​துவதன் மூலம் அரசின் பணம் வீணாக செல​விடப்​படு​வதுடன், ஒரே தொகு​திக்கு 2 எம்எல்ஏக்கள் என்ற நிலை உரு​வாகி அரசி​யல் சாசன பிரச்​சினை எழும். அதே​நேரம், தேர்​தல் வழக்​கு​கள் தொடருவதற்கு முன்​பாகவே அத்தொகு​தி​கள் காலி​யான​தாக அறிவிக்கப்​பட்​டன என்ற வாதத்தை​யும் ஆராய வேண்​டி​யுள்ளது.

எனவே, இதுதொடர்​பாக தேர்​தல் ஆணை​யம், மத்​திய அரசு, சட்​டப்​பேர​வைச் செயலர் மற்​றும் முதல்​வர் விஜய், எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், சி.​விஜய​பாஸ்​கர், ஜெயக்​கு​மார், இசக்கி சுப்​பையா ஆகியோர் 3 வாரங்​களில் பதில் அளிக்க வேண்​டும். அது​வரை இந்த தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தல் தொடர்​பான அறி​விப்பை தேர்​தல் ஆணை​யம் வெளி​யிடக் கூடாது. இவ்​வாறு உத்​தர​விட்ட நீதிப​தி​கள், விசா​ரணையை ஜூலை 31-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​தனர்.

SCROLL FOR NEXT