மதுரை: தமிழகத்தில் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக இருப்பது தொடர்பாக உயர்கல்வி முதன்மைச் செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் எஸ்.முத்தையாவை பதவிநீக்கம் செய்யக்கோரி ஜோசப் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். பொறுப்பு பதிவாளர் தரப்பில், தற்காலிக அடிப்படையில் பொறுப்பு பதிவாளர் பதவியை வகிக்கிறேன். அப்பதவிக்கு தேவையான அனைத்து தகுதிகளும் உள்ளன.நிரந்தர பதிவாளர் நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என கூறப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது தமிழகத்தில் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை என்பதும், பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தற்போது பொறுப்பு பதிவாளர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருவதும் அனைத்து முடிவுகளும் கன்வீனர் கமிட்டி மூலமாகவே எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டன.
இதையடுத்து நீதிபதி, இந்த மனுவை விசாரிக்க நீதிமன்றம் விரும்பவில்லை. இருப்பினும் 14 பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாத நிலை தொடர்பாக உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளரிடமிருந்து அறிக்கை பெற நீதிமன்றம் விரும்புகிறது.
துணைவேந்தர் பதவிகளை நிரப்ப எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலரிடமிருந்து உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.