சென்னை: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அதிமுக எம்பியும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் மீது குற்ற நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு விழுப்புரத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்பியும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சென்னையைச் சேர்ந்த பிரமிளா, ராதிகா ஆகியோர் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின்பேரில் சி.வி.சண்முகத்துக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி கடந்தாண்டு நவ.11 அன்று மாநில மகளிர் ஆணையம் தமிழக டிஜிபி்க்கு பரிந்துரை செய்திருந்தது.
இதை எதிர்த்து சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பாக நடந்தது.
அப்போது சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.முகமது ரியாஸ், விசாரணைக்கு ஆஜராகும்படி மாநில மகளிர் ஆணையம் அனுப்பிய சம்மனில் புகார் குறித்த எந்த விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை. மகளிர் ஆணையத்தின் பிற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் குற்ற நடவடிக்கை எடுக்கும்படி ஆணையத்தலைவர் டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். எனவே ஆணையத்தின் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என வாதிட்டார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து காவல்துறை தரப்பில், மகளிர் ஆணையம் பிறப்பித்த சம்மனில் புகார் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஆணையம் அனுப்பிய பரிந்துரை மீது நடவடிக்கை எடுப்பதா, வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
மகளிர் ஆணையம் தரப்பில், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சி.வி.சண்முகம் மீது குற்ற நடவடிக்கை எடுக்க ஆணையத் தலைவர் மற்றும் இரு உறுப்பினர்கள் சேரந்து தான் பரிந்துரை செய்துள்ளனர். அந்த பரிந்துரையில் கையெழுத்திடும் அதிகாரம் படைத்தவர் என்ற முறையில் ஆணையத் தலைவர், டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தன்னிச்சையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை, என வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, அதிமுக எம்பி சி.வி. சண்முகத்துக்கு எதிராக மாநில மகளிர் ஆணையம் மேற்கொண்ட விசாரணையில் நடைமுறை தவறுகள் உள்ளதாகக் கூறி அவருக்கு எதிராக குற்றநடவடிக்கை எடுக்கும்படி மகளிர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.