தமிழகம்

திருப்பரங்குன்றம் வழக்கு: தலைமைச் செயலர், ஏடிஜிபி-யிடம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் காட்டம்

கி.மகாராஜன்

மதுரை: திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலர், ஏடிஜிபி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஆஜராகினர். பின்னர், விசாரணை ஜன.9-க்கு தள்ளி வைக்கப்பட்டது.

மேலும், ‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதற்கு உரிய பதிலை சொல்லியே ஆக வேண்டும்’ என்று இருவரிடமும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் காட்டமாக கூறினார்.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கின் நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மாநகர் காவல் ஆணையர் லோகநாதன், துணை காவல் ஆணையர் இனிகோதிவ்யன், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது தலைமை செயலாளரிடம் நீதிபதி, “இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை அதிகாரிகள் மீறியுள்ளனர், அவமதித்துள்ளனர். இதற்கு அதிகாரிகள் பதில் சொல்லியாக வேண்டும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் 144 தடையாணை பிறப்பித்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காதது ஏன் என விளக்கம் அளிக்க வேண்டும். நான் தேர்தலில் போட்டியிடப்போகிறேனா? இரு நீதிபதிகள் அமர்வில் ஆட்சியர், காவல் ஆணையருக்காக ஆஜரான வழக்கறிஞர் ஏன் அப்படி கூறினார்?” என்றார்.

தலைமைச் செயலர் பதிலளிக்கையில், “எந்த உள்நோக்கத்துடனும் 144 தடையாணை பிறப்பிக்கப்படவில்லை. ஏற்கெனவே உள்ள உத்தரவுகளின் அடிப்படையில் தான் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டது.

தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றக் கூடாது என்ற கருத்து இல்லை. அந்த உத்தரவுக்கு எதிராக இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்து அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

இதையேற்க மறுத்த நீதிபதி, “நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதற்கு உரிய பதிலை சொல்லியே ஆக வேண்டும்.

சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருக்கக் கூடாது. நீதிமன்ற உத்தரவுகள் நிறைவேற்றப்படாதது குறித்து உரிய பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜன.9-க்கு தள்ளிவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT