மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழில் அறங்காவலர்களின் பெயர்களை நீக்கியது கோயிலின் செயல் அலுவலர்தான். அவர் சுயமாக முடிவெடுத்து அறங்காவலர்களின் பெயர்களை நீக்கியுள்ளார் என உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலெட்சுமி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப். 17-ல் குடமுழுக்கு நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது. குடமுழுக்கு விழா அழைப்பிதழில் கோயில் அறங்காவலர்கள் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. இதற்கு முன்பு நடைபெற்ற குடமுழுக்கு மற்றும் கோயில் விழாக்களின் அழைப்பிதழ்களில் அறங்காவலர்களின் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த அழைப்பிதழில் அரசியல் காரணங்களுக்காக அறங்காவலர்களின் பெயர்கள் அச்சிடாமல் விடப்பட்டுள்ளது.
எனவே, மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் அதிகாரவரம்புக்கு உட்பட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கவும், அறங்காவலர்களின் சட்டப்பூர்வ கடமைகள், பணிகளில் கோயில் அதிகாரிகள் தலையிடவோ, இடையூறு செய்யவோ, தடுக்கவோ, கட்டுப்பாடுகள் விதிக்கவோ கூடாது என்றும் அறங்காவலர்களின் செயல்பாட்டுக்கு அனைத்து ஒத்துழைப்பு வழங்கவும் இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அறங்காவலர் குழு தரப்பில் அரசியல் காணங்களுக்காக பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டது. அறநிலையத் துறை செயலர் ஆணையர் தரப்பில், அழைப்பிதழ் அச்சிடப்பட்டதில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பங்கு இல்லை. கோயில் இணை ஆணையர்- செயல் அலுவலர்தான் அறங்காவலர்களின் பெயர்களை அழைப்பிதழில் இருந்து நீக்கியுள்ளார். அவர் சுயமாக முடிவெடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, குடமுழுக்கு விழா அழைப்பிதழில் அறங்காவலர் குழுவின் பெயர் விடுபட்டது தவறு என்றார்.
அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில், 3,000 அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அறங்காவலர்களின் பெயர்களை அழைப்பிதழில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டாலும் அதை செயல்படுத்தி மீண்டும் அழைப்பிதழ் விநியோகம் செய்ய முடியாத சூழல் உள்ளது எனக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதி, குடமுழுக்கு அழைப்பிதழில் கோயில் அறங்காவலர் குழுவினரின் பெயர்களை அச்சிடாமல் விட்டது தவறு. குடமுழுக்கு முடிந்த பிறகு கோயிலில் வைக்கப்படும் கல்வெட்டில் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்களின் பெயர்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். கோயில் என்பது மக்கள் அமைதியை தேடி வரக்கூடிய இடம்.
இந்த இடத்தில் அரசியல் செய்வது மிகவும் வருந்தத்தக்க செயல். கோயிலில் அரசியல் செய்வது ஏற்கத்தக்க செயலும் அல்ல. வருங்காலங்களில் மதவழிபாட்டு தலங்களில் எவ்விதமான அரசியல் தலையீடும் இல்லாமல் விதிப்படி நடைபெறுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். மனு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.