மதுரை விமான நிலைய முகப்புத் தோற்றம். 
தமிழகம்

மதுரை விமான நிலைய விரிவாக்கம்: கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் வசிப்பவர்கள் 2 வாரத்தில் காலி செய்ய ஐகோர்ட் உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் வசிப்பவர்கள் 2 வராத்தில் காலி செய்யவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு பகுதியை சேர்ந்த லட்சுமி உள்ளிட்ட உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், "சின்ன உடைப்பு பகுதியில் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக 2009 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான இழப்பீடு முடிவு செய்யப்பட்டு அனைத்து நபர்களுக்கும் இழப்பீடும் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் மறு குடியமர்வு மற்றும் மறுவாழ்வு தொடர்பாக எவ்விதமான முறையான திட்டமும் எடுக்கப்படவில்லை.

          

தொழிலாக- பயன்பாட்டிற்காக நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் போது மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு ஆகியவற்றை செய்து தர வேண்டும். 2013 ஆம் ஆண்டு கொணரப்பட்ட விதியும் இதனை உறுதி செய்கிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆனால் இப்பகுதி மக்களை வெளியேற்றும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. ஆகவே மறுவாழ்வு, மறுகுடியமர்வு வசதிகளை செய்து தராமல், நிலம் கையகப்படுத்துதல் விதிகளை அமல்படுத்துவது செல்லாது" என உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று தீர்ப்பை வழங்கியது. அதில், "மனுதாரர்கள் 2 வாரங்களில் சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து காலி செய்ய வேண்டும். தவறினால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை எடுக்கலாம். மனுதாரர்கள் நிலம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் வழங்க வேண்டும். அந்த கடிதத்தின் அடிப்படையில், தகுதியையும் பரிசீலித்து, கடிதம் பெற்ற 2 வாரங்களில் 2 செண்ட் நிலத்தை ஒதுக்கி, ஆட்சியர் வழங்க வேண்டும். வீடு கட்டுவது தொடர்பான அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்.

SCROLL FOR NEXT