தமிழகம்

நியாயமான விசாரணையின்றி டாஸ்மாக் ஊழியர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக நியாயமான விசாரணை நடத்தாமல் டாஸ்மாக் பணியாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், தற்காலிக பணிநீக்கம், பணியிடமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளும், தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், குற்ற குறிப்பாணை அனுப்பி விசாரணை நடத்தி பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என, டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஜூலை 24-ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்தது.

இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் செயலாளர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சுரேந்தர், இயற்கை நீதியைப் பின்பற்றாமல், பணியாளர்களுக்கு எதிராக எந்த ஒரு தண்டனை நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது.

நியாயமான, முறையான விசாரணைக்குப் பிறகுதான், தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும். அவ்வாறு தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு தொழிலாளர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க போதுமான அவகாசத்தை வழங்க வேண்டும்.

எனவே, இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும், தண்டனை விதித்தாலும், அது இயற்கை நீதி, பணி விதிகள் மற்றும் சட்ட விதிகளைப் பின்பற்றியே இருக்க வேண்டும்.

தொழிலாளர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க நியாயமான விசாரணை நடத்தாமலும், எந்த தொழிலாளர்களும் தண்டிக்கப்படவோ, இடமாற்றம் செய்யப்படவோ, பணிநீக்கம் செய்யப்படவோ கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

SCROLL FOR NEXT