தமிழகம்

இன்சூரன்ஸ் மோசடிகள்: அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: இன்சூரன்ஸ் மோசடி வழக்குகளை விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோசடிகளை தடுக்கத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

போலி மருத்துவ அறிக்கைகள் மூலம் இன்சூரன்ஸ் தொகையைப் பெறும் மோசடி சம்பவங்கள், ஜோடிக்கப்பட்ட போலி விபத்து வழக்குகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க கூடுதல் டிஜிபி தலைமையில் மாவட்டம்தோறும் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பி்ல் முதுநிலை மேலாளர் ஜி.விஜயலட்சுமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஷைலப்பா கல்யாண், “வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்கள் போலி விபத்துகளுக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடுவதால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரும் இதற்கு உடந்தையாக செயல்படுகின்றனர்” என்றார்.

அரசுத் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.கணேஷ்குமார், “கூடுதல் டிஜிபி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சாத்தியமில்லை. மாவட்டங்களில் குற்றப் பிரிவு டிஎஸ்பிக்கள் தலைமையிலும், மாநகரங்களில் உதவி ஆணையர்கள் தலைமையிலும் குழு அமைக்கலாம்” என்று யோசனை தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்: இன்சூரன்ஸ் மோசடி வழக்குகளை விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க தமிழக அரசும், டிஜிபியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டங்களில் குற்றப்பிரிவு டிஎஸ்பிக்கள் தலைமையிலும், மாநகரங்களில் உதவி ஆணையர்கள் தலைமையிலும் இந்த குழுக்களை அமைத்து, அதற்கு தேவையான உள்கட்டமைப்பு, நிதி உதவிகளையும் அரசு செய்துதர வேண்டும். இக்குழுக்களின் செயல்பாடுகளை மாவட்ட எஸ்.பி.க்கள், மாநகரக் காவல் ஆணையர்களும், மாநில அளவில் கூடுதல் டிஜிபியும் கண்காணிக்க வேண்டும்.

மோசடி தொடர்பாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அளிக்கும் புகார்களை இந்த குழு உரிய காலத்துக்குள் விசாரித்து, அதற்கான ஆதாரங்களை சேகரிக்க வேண்டும். இன்சூரன்ஸ் மோசடிகளை தடுக்கத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியிலான நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT