சென்னை உயர்நீதிமன்றம் | கோப்புப் படம் 
தமிழகம்

வள்ளலார் சத்தியஞான சபை நில ஆக்கிரமிப்பாளர்கள் விவரம் அளிக்க ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: வள்ளலார் சத்தியஞான சபை நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்களை நான்கு வாரங்களில் அறநிலையத் துறைக்கு வழங்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தின் சத்தியஞான சபை நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 30 ஏக்கர் பரப்பிலான சத்தியஞான சபை நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கவும், பெருவெளியில் ஆக்கிரமிப்புகளை தடுக்க, சுற்றுச்சுவர் அமைக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பெருவெளியைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்புவது தொடர்பாக நிலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சுவர் கட்டுவதற்கான மதிப்பீட்டை எதிர்பார்த்துள்ளதாகவும் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சத்தியஞான சபை நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரப்பட்டுள்ளதாகவும், அந்த விவரங்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவரங்களை வழங்க மாவட்ட ஆட்சியர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்கள் 2024-ஆம் ஆண்டே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களின் விவரங்களை வழங்குவதில் ஏன் தாமதம் செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நான்கு வாரங்களில் ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்களை அறநிலையத் துறைக்கு வழங்க வேண்டும் என ஆட்சியர் தரப்புக்கு உத்தரவிட்டனர்.

அந்த விவரங்களைப் பெற்றதும், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், பெருவெளியைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டுவது தொடர்பான நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி, அறநிலையத் துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அத்துடன், பெருவெளியில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த வேலி சேதப்படுத்தப்பட்டது தொடர்பான புலன் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வழக்கில் கடலூர் காவல் கண்காணிப்பாளரை எதிர்மனுதாரராகச் சேர்த்து, விசாரணை நிலை குறித்து நவம்பர் 5-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT