தமிழகம்

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வணிக வளாகம் அமைக்கும் பணிகளை தொடர ஐகோர்ட் அனுமதி

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வணிக வளாகம் அமைக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என மாநகராட்சிக்கு அனுமதியளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலுார் மஞ்சக்குப்பம் விளையாட்டு மைதானத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.14.15 கோடி செலவில் பூங்கா, 110 கடைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வணிக வளாகம் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து கடலுாரைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கடலூர் மாநகராட்சி தரப்பில், மஞ்சக்குப்பத்தில் மொத்தம் உள்ள 15 ஏக்கர் பரப்பில், 4 சதவீதம் மட்டுமே வணிக வளாகமாக மாற்றப்படவுள்ளது. கடைகளின் கட்டுமானங்கள் ஏற்கெனவே 50 சதவீதம் முடிவடைந்து விட்டது. இந்த கடைகள் விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவர் போல இருக்கும். கடைகள் மூலமாக கிடைக்கும் வருமானம் விளையாட்டு மைதானத்தின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “இந்த வணிக வளாகத்தால் விளையாட்டு மைதானத்துக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படக்கூடாது எனக் கூறி 110 கடைகள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த வணிக வளாக கட்டுமானப் பணிகளை தொடரலாம்” என மாநகராட்சி நிர்வாகத்துக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளனர். அதேநேரம் “எஞ்சியுள்ள இடத்தில் எதிர்காலத்தில் எந்தவொரு கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது” என்று நீதிபதிகள் தடை விதித்துள்ளனர்.

SCROLL FOR NEXT