தமிழகம்

பல்கலை. பேராசிரியர்கள் ஓய்வு வயது உயர்வு வழக்கு: 8 வாரங்களில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் உள்ள பல்​கலைக்​கழகங்​களில் பணி​யாற்​றும் பேராசிரியர்​களின் ஓய்​வு​பெறும் வயதை 60-ல் இருந்து 65-ஆக உயர்த்​தக்​கோரும் கோரிக்கை தொடர்​பாக 8 வாரங்​களில் பரிசீலித்து முடி​வெடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக தமிழ்​நாடு பல்​கலைக்​கழக ஆசிரியர் சங்​கங்​களின் கூட்​டமைப்​பின் சார்​பில் அதன் பொதுச் செயலா​ள​ரான பாஸ்​கரன் தர்​மர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்கல் செய்​திருந்த மனு​வில், தமிழக உயர்​கல்​வித் துறை​யில் கடந்த பல ஆண்​டு​களாக சீரான இடைவெளி​யில் உதவிப் பேராசிரியர்​கள் நியமிக்​கப்​ப​டாத​தால், மாநிலத்​தின் பல பல்​கலைக்​கழகங்​களி​லும் பேராசிரியர் மற்​றும் உதவிப் பேராசிரியர் பணி​யிடங்​கள் அதி​கள​வில் காலி​யாக உள்​ளன.

இதனால் மாணவர்​களின் கல்​வித்​தரம் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த சூழலில் தற்​போது பணி​யில் உள்ள பல பேராசிரியர்​கள் இன்​னும் சில ஆண்​டு​களில் பணி ஓய்வு பெறவுள்​ளனர். இந்த சூழலில் தமிழகத்​தில் உள்ள பல்​கலைக்​கழகங்​களில் ஆசிரியர் பற்​றாக்​குறை மேலும் தீவிரமடை​யும். மத்​திய மனிதவள மேம்​பாட்டு அமைச்​சகம் கடந்த 2007-ம் ஆண்டு பல்​கலைக்​கழக மானியக் குழு​வுக்கு அனுப்​பி​யுள்ள பரிந்​துரைப்​படி பல மாநிலங்​கள் பல்​கலைக்​கழக ஆசிரியர்​களின் ஓய்​வு​பெறும் வயதை 60-ல் இருந்து 65-ஆக உயர்த்​தி​யுள்​ளன. ஆனால் தமிழகத்​தில் இன்​னும் இந்த ஓய்வு பெறும் வயது உயர்த்​தப்​பட​வில்​லை.

எனவே தமிழகத்​தி​லும் பல்​கலைக்​கழக பேராசிரியர்​களின் ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 65 ஆக உயர்த்​தக்​கோரி கடந்​தாண்டு நவ.28 அன்று தமிழக அரசுக்கு மனு அளித்​தும் இது​வரை​யிலும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை. என அதில் தெரி​வித்​திருந்​தார். இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி பி.டி.ஆஷா முன்​பாக நடந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் தாட்​சா​யிணி ரெட்​டி​யும், அரசு தரப்​பில் வழக்​கறிஞர் கே. சதீஷூம் ஆஜராகி வாதிட்​டனர்.

அதையடுத்து நீதிப​தி, ‘‘மனு​தா​ரர் எழுப்​பி​யுள்ள கோரிக்கை பரிசீலனக்​குரிய​தாகவே உள்​ளது. இதுதொடர்​பாக அவர் கடந்​தாண்டு அளித்​துள்ள மனு இன்​னும் நிலு​வை​யில் இருந்து வரு​கிறது. எனவே பல்​கலைக்​கழகங்​களில் பணி​யாற்​றும் ஆசிரியர்​களின் ஓய்வு வயதை 60-ல் இருந்து 65 ஆக உயர்த்​தக்​கோரும் மனு​தா​ரரின் கோரிக்​கையை தமிழக அரசு 8 வார காலத்​துக்​குள் பரிசீலித்து சட்​டப்​படி முடி​வெடுக்க வேண்​டும்’’ என உயர் கல்​வித்​துறைச் செயலருக்கு உத்​தர​விட்​டு வழக்​கை முடித்​து வைத்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT