சென்னை: மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை எதிர்த்து, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் 19-ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை ஏற்று, மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக பிரத்யேகமாக ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என அந்த தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது,
இந்த திருத்தத்தை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கெனவே நடைபெற்றது.
அப்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில், “இந்த சிறப்பு தீர்மானம் தொடர்பாக ஜூன் 18-ம் தேதி, அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட தீர்மான நகலில் இடம்பெறாத ஒரு திருத்தத்தின் மீது சட்டப்பேரவையில் எந்தவொரு விவாதமும் நடத்தப்படாமல் அந்த திருத்தம் தீர்மானத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசுக்கு அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது பேரவைத் தலைவர் எங்களை பேச அனுமதிக்கவில்லை” என வாதிடப்பட்டது.
தமிழக அரசு தரப்பில், ஜூன் 19-ம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகளின் வீடியோ காட்சிகள் நீதிபதிகளிடம் காண்பிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, “எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை ஏற்று அந்த திருத்தத்தை தீர்மானத்தில் சேர்க்க முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டார். அதையேற்று பேரவைத் தலைவர் திருத்தத்துடன் கூடிய தீர்மானத்தை பொது வாக்கெடுப்புக்கு விட்டார்.
திருத்தம் கொண்டு வரப்பட்டபோது உறுப்பினர்கள் யாரும் அதை எதிர்க்கவில்லை. ஆனால் தற்போது அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளனர், மேலும் சட்டப்பேரவை நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது. அதற்கு அரசியல் சாசனம் தடை விதிக்கிறது. மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையின் முடிவாக கருதி வழக்குத் தொடர முடியாது” என வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு, “அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது. அதேபோல் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசும் கருத்துகளுக்கு சட்டப்பாதுகாப்பு உள்ளது. தீர்மானம் நிறைவேற்றியபோது அதைமனுதாரர் உள்பட யாரும் எதிர்க்கவில்லை.
சட்டப்பேரவையில் எழுப்பப்படும் அனைத்து கேள்விகள் குறித்தும் முடிவெடுக்க பேரவைத் தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது. அந்தவகையில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்தை தீர்மானத்தில் சேர்த்து திருத்தம் கொண்டு வந்திருப்பது பேரவைத் தலைவரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இதுகுறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.