சென்னை: மெரினாவில் கடந்த ஜூலை 5-ம் தேதி குளிக்கச்சென்ற மாதவரத்தைச் சேர்ந்த சந்தோஷ் (17) என்ற இளைஞர் கடல் அலையில் சிக்கிய நிலையில், அவரை மீட்டு ஒப்படைக்கக் கோரி அவரது தந்தை கே.கோபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ந்தார்.
இந்த மனுவை கடந்த முறை விசாரித்த நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, பி. கார்த்திகேயன் அமர்வு, “கடல் அலையில் சிக்குபவர்களை உயிருடன் மீட்கும் வகையில் கடற்படை ஹெலிகாப்டர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?” என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதில் கடலோரக் காவல் படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இதே அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரின் மகன் கடலில் மூழ்கியது குறித்து 7 மணி நேரம் கழித்தே போலீஸார் தங்களுக்கு தகவல் தெரிவித்ததாக தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு ஆணைய மையம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: மீட்புப் பணி விஷயத்தில் மத்திய, மாநில மீட்பு அமைப்புகள் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை. ‘முரசு’ புயல் காரணமாக காசிமேடு மீனவர்கள் 9 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவமும் நடந்தது.
ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது என்பதை உணர்ந்து, கடலில் மூழ்குபவர்களை உடனடியாக உயிருடன் மீட்கும் வகையில், அவசர காலங்களில் தேடல், மீட்பு பணிகளை திறமையாக, விரைவாக மேற்கொள்ளும் வகையில் நிலையான வழிகாட்டு செயல்பாட்டு முறையை தமிழக அரசு உருவாக்கி, அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.