தமிழகம்

டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத் துறை தீர்ப்பாயத்தை அணுக ஆகாஷ் பாஸ்கரனுக்கு ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: டாஸ்மாக் முறைகேடு விவகாரம் குறித்து அமலாக்கத் துறை நடத்திய சோதனை தொடர்பாக அமலாக்கத் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு மே மாதம் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்களை பறிமுதல் செய்தது.

அமலாக்கத் துறையின் இந்த சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத் துறைக்கு தடை விதித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி, டாஸ்மாக் நிறுவனத்துக்கும் தமக்கும் எந்த வித தொடர்பும் இல்லாத நிலையில் தமது இல்லத்தில் சோதனை நடத்தியது தவறு என வாதிட்டார்.

மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கக் கோரி அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதற்கெதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, ஆவணங்கள் தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரனுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்ப பெறப்பட உள்ளதாகவும், வேண்டுமானால் உரிய விதிமுறைகளை பின்பற்றி புதிதாக நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் கூறினார்.

இதனையடுத்து, அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், ஆகாஷ் பாஸ்கரன் தனது தரப்பு வாதங்களை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முன்வைக்கலாம் என உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடைகளை நீக்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT