தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், ஆலங்குளம், புளியங்குடி, கடையநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் 12 மணியளவில் சூரியனைச் சுற்றி வட்டமாக வானவில் போன்று ஒளி வட்டம் தென்பட்டது.
இதுகுறித்து வானிலை ஆர்வலரான தென்காசி வெதர்மேன் ராஜா கூறியதாவது: சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் சிரோஸ்ட்ராடஸ் போன்ற பனிப்படிகங்களாக மெல்லிய மேகங்கள் இருக்கும்.
சூரிய ஒளி இந்த பனிப் படிகங்களின் வழியே செல்லும்போது ஒளி விலகல் மற்றும் ஒளி பிரதிபலிப்பு அடைகிறது. பனிப் படிகங்கள் வழியாக ஒளி செல்லும் போது, ஒளி 22 டிகிரி கோணத்தில் வளைந்து பிரிகிறது.
இதனால் சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் உருவாகிறது. இந்த நிகழ்வு ‘22 டிகிரி ஹாலோ’ என்றும் அழைக்கப்படுகிறது.
சில நேரங்களில் சூரிய ஒளிபனிப் படிகங்களில் சிதறி ஒளிவட்டம் வானவில் போன்று தோன்றும். அதுபோன்ற ஒளிவட்டம் இப்போது தென்பட்டுள்ளது என்றார்.