புதுச்சேரி: “மோடி ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்றால் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி போராட்டம் நடத்திய ராகுல்காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்.பிக்கள் கைது செய்யப்பட்டது மற்றும் மத்திய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் தபால் நிலையம் நோக்கி செல்லும் ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது.
மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏ வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரங்கப்பிள்ளை வீதி-செஞ்சி சாலை சந்திப்பில் கூடிய காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஞானேஷ் குமார் வேடம் அணிந்த ஒருவருக்கு கைவிலங்கு போட்டு அழைத்து வந்தனர்.
அங்கிருந்து தபால் நிலையம் நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் பேரிகார்டு அமைத்து தடுத்தனர். ஆனாலும், சிலர் பேரிகார்டு மீது ஏறி தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனால் போலீஸார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அதே நேரத்தில் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் தபால் நிலையம் வந்து அதன் எதிரே தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், மாநில தலைவர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதில் இருந்தே தெரிகிறது அவர் பயந்துள்ளார், அதுமட்டுமின்றி அவர் வெளியே வர முடியாத அளவுக்கு இருக்கின்றார்.
ஏனென்றால் அவர் செய்த குற்றங்கள் அப்படி. அவரை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஞானேஷ் குமார் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். அவர் இளைய சமுதாய மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பவர் என்று சொல்ல வேண்டும். அந்த கொள்ளைக்கு நம் நாட்டின் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உடந்தையாக இருக்கின்றனர். இவர்கள் மூன்றுபேர் மீதும் விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும். அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். என்றார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், “அம்பேத்கரால் வழங்கப்பட்ட அதிகாரத்தை மோடி, அமித்ஷாவுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தோடு சேர்ந்துகொண்டு ஞானேஷ் குமார் திட்டமிட்டு சதி செய்து அவர்கள் ஆட்சியில் அமர்த்துவதற்காக வாக்காளர் பட்டியலில் இருந்து இளைஞர்களை நீக்கியுள்ளார். இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
அவர்களுக்கு பாஜக வக்காலத்து வாங்குகிறது. ஞானேஷ் குமார் சிக்கினால் மோடி, அமித்ஷா சிறைக்கு செல்வார்கள். ஆர்எஸ்எஸ் இயக்கம் முழுமையாக மக்கள் மத்தியில் நிராகரிக்கப்படும் என்பதால் அவரை காப்பாற்றுகின்றனர். இது கூட்டு சதி.
மக்களை ஏமாற்றி ஜனநாயகத்தை படுகுழியில் புதைத்து, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செயல்படுகின்ற ஞானேஷ் குமார் பதவி விலகும்வரை எங்களின் போராட்டம் தொடரும். தற்போது பிரதமர் மோடி 25 வது ஆண்டு அரசியல் வாழ்க்கையை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
அவர் திரும்பி பார்க்க வேண்டும். இந்த நாட்டில் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, மன்மோகன்சிங், நரசிம்மராவ் காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சி இப்போது மோடி ஆட்சியில் மறைக்கப்பட்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் அதானி, அம்பானிக்கு தாரை வார்த்து கொடுப்பது தான் மோடியின் சாதனை.
இப்படிப்பட்ட மோடி ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்றால் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். மக்கள் மத்தியில் உள்ள வாக்குரிமையை பறித்து ஜனநாயக முறைப்படி இல்லாமல் திருட்டு தனமாக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்துவிட்டு, நாங்கள் 18 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளோம் என்று பிரதமர் மார்தட்டிக்கொள்கிறார்.
கட்சிகளை உடைப்பது, எம்.பிக்களை விலைக்கு வாங்குவது தான் மோடியின் மிகப்பெரிய சாதனை. இந்த நாட்டில் 25 கோடி பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இதற்கு பிரதமர் தான் பதில் சொல்ல வேண்டும். இந்தியா முழுவதும் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடக்கிறது. ஆகவே ஞானேஷ் குமார், பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்யும் வரையும், வாக்குச்சீட்டு முறை கொண்டு வரும் வரையில் எங்கள் போராட்டம் ஓயாது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.