தமிழகம்

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் வீரமணி, கூட்டாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் சாந்தி, மகேந்திர சிம்மன் ஆகியோரைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

நலத்திட்டங்கள் வழங்குவதாகவும் கல்வி உதவித்தொகை அளித்து படிக்க வைப்பதாகவும் கூறி ஏழை சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் சாந்திமற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், வீரமணியின் நிறுவனத்தில் பணியாற்றிய அவரது உதவியாளர் கணேசனும் கைது செய்யப்பட்டார்.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும்நிலையில், அந்தச் சம்பவங்களைப் படம் பிடித்து வீரமணியை மிரட்டி ஒரு கும்பல் கோடிக்கணக்கில் பணம் பறித்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதன்பின்னணியில் கட்டப் பஞ்சாயத்து கும்பல், போலீஸ் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் தலையீடு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் முழுமையாக திரட்டி,குற்றத்தில் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து கைதுசெய்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் கடந்த 25-ம் தேதி உத்தரவிட்டார்.

இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி, சென்னை காவல் மேற்கு மண்டல இணை ஆணையர் திஷா மிட்டல், டிஜிபி அலுவலக செய்தித் தொடர்பாளர் எஸ்.பி. முத்தரசி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பணப் பிரிவு துணை ஆணையர் கீதாஞ்சலி ஆகியோர் இடம்பெற்றனர்.

இக்குழுவினருக்கு உதவும் வகையில் மேலும் 6 பெண் டிஎஸ்பிக்களும் நியமிக்கப்பட்டனர். சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், வீரமணி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய மேலும் சிலருக்கு நேரில் ஆஜராகி விசாரணைக்கு உட்படுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை வீரமணி மீது 4 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த துணை ஆணையர் கீதாஞ்சலி, சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ச் சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கீதா நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முதல் எஸ்ஐடி விசாரணை பணியைத் தொடங்கினார்.

இதற்கிடையே, வீரமணியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும் வகையில் காவல் துறை சார்பில் செல்போன் எண் (93453 19676) வெளியிடப்பட்டிருந்தது. அந்த எண்ணில் தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகின்றன. அவற்றின் அடிப்படையில் சிறப்புப் புலனாய்வுக் குழு போலீஸார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணியைக் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் நேற்று உத்தரவிட்டார்.

இதேபோல், வீரமணியின் கூட்டாளிகளாகக் கூறப்படும் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகியோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வீரமணியின் வங்கிப் பணப் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களும் திரட்டப்பட்டு வருகின்றன. இதில், அவரிடம் இருந்து பணம் பறித்த கும்பல் பற்றிய முழு விவரங்கள் தெரிய வரும் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT