தமிழகம்

கம்யூனிஸ்ட் உறுப்பினர் விவரம் சேகரிக்க கூறிய குஜிலியம்பாறை வட்டாட்சியர் சென்னைக்கு பணியிட மாற்றம்

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க உத்தரவிட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் சென்னைக்கு மாற்றப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாச்சாமி, குஜிலியம்பாறை வட்டத்தில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார். இதில், அனைத்து கிராமங்களிலும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்களின் பெயர், முகவரி ஆகியவற்றை கிராம உதவியாளர்கள் மூலம் சேகரித்து உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.

இந்த சுற்றறிக்கையைக் கண்டித்து போராட்டம் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சியினர் அறிவித்தனர். திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தமும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரச்சினை பெரிதாவதை அறிந்த மாவட்ட ஆட்சியர் துர்கா, வட்டாட்சியரின் சுற்றறிக்கையைத் திரும்ப பெறுவதாகக் கூறியதோடு விசாரணைக்கும் உத்தரவிட்டார். பழநி கோட்டாட்சியர் (பொ) பிரபு விசாரணை நடத்தி அறிக்கை அளித்ததன்பேரில் அய்யாசாமியை சென்னை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில் பணியேற்புச் செய்யுமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT